ஆபிரகாம் கிரி - சாட்சி


கர்த்தர் ராஜரீகம் பண்ணுகிறார்.

நான் ஒரு கிறிஸ்துவை அறியாத இந்து பிராமண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். சிறு வயதிலிருந்தே ஆன்மீகப்பற்றோடு வளர்தவன். விக்கிரக ஆராதனையை கேள்வி கேட்டும், சடங்குகளை கேள்வி கேட்டும் வந்துள்ளேன்.

ஆயினும் என் பெற்றோர் வழிச்சென்று பற்பல விக்கிரக ஆராதனைகள் நடத்தி வந்தேன். என் பெற்றோர் சாயி பாபா எனும் மனிதனை கடவுளாக வழிபட்டு வந்தனர். சென்னை இராயபேட்டையில் ஒரு கோவில் குருக்கள் எங்களது அண்டை வீட்டார். அவரோடு சிறுவயதில் இருந்த நான், அவர் கோவிலில் இல்லாத போது அந்தக் கோவில் குருக்களாகவும் ஆராதனை செய்தவன். 

நான் படித்து முடிக்கும் தருவாயில் ஒரு வித நரம்பு (நியூரோ) நோய் வந்து, தலையுள் யாரோ கயிறு கட்டி இழுப்பது போல் வலி வரும். அந்த வித இழுப்பு வந்தால் சில நிமிடங்களுக்கு கண்பார்வை மங்கலாகிவிடும். சில நேரம் ஓரிரு வினாடிகளுக்கு கண்பார்வையை இழந்துவிடுவேன்.

நோய்க்கான சிகிச்சை அளிக்க போதிய பணமில்லை. ஆதலின் நோயை பொருட்படுத்தாது இருந்தோம். எனினும் படித்து முடித்து, நல்ல தேர்ச்சி பெற்று மின்னியல் பட்டயம் (Diploma in Electrical Engineer)

கல்வியால் ஒரு தொழிற்சாலை பராமரிப்பு துறையில்  (maintenance department) வேலை செய்து வந்தேன்.

அதிஅழுத்த மின்சாரம் கொண்ட இயந்திரங்கள் பழுதாகும் போது அதை கூர்ந்து கவனித்து பராமரித்தலே என் வேலை.

இவ்வேலையை நரம்பு இழுப்பின் காரணமாக தொடர முயலா நிலை.

ஆகவே அந்த வேலையை விட்டு விற்பனை துறையில் நான் வேறு ஒரு நிறுவனத்தில் சேர்ந்தேன். இங்கு தான் நம் மீட்பர் இயேசுவை குறித்து ஒரு உடன்வேலை செய்யும் நபர் கூறினார்.

முதலில் மிகவும் எதிர்த்து பேசுவேன், அவரை உதாசீனம் செய்து வந்தேன்.

நினைத்து பார்த்தால் நம் கர்த்தர் ஒரு உவமையில் ஒரு கைம்பெண் நியாயாதிபதியிடம் அன்றாடம் வேண்டியது போல், (லூக்கா 18 : 2 - 7) இவர் என்னிடம் கிறிஸ்து குறித்து கூறிவந்தார். முடிவு நாட்கள் பற்றி எழுதப்பட்ட ஒரு சில புத்தகங்கள் கொடுத்து வந்தார்.

பிறகு ஒருநாள் நடந்த வாக்குவாதத்தில் அவர், மெய்யான கடவுளை உன் அறையில் சென்று தாழிட்டு அழை. அவரோடே பேசு. அவர் பேசுவார் என்றார்.

அதை நான் ஏற்று, பவுல் தன் ஊழியத்தில் அத்தனே பட்டிணத்தில் கண்டது போல் "பெயர் தெரியா தெய்வமே" என்று கூறி தொடங்கினேன் என் வேண்டுதல்கள்.பல நாட்கள் சென்றன. ஒருபதிலும் இல்லை.

ஏதோ ஏமாற்று வேலை என்று கூட சில முறை நினைத்தேன்.

பலநாட்கள் கடந்தது. ஒருநாள் என்னை ஒரு சக்தி இழுத்துச் சென்று ஒரு முடிவு கால புத்தகம் ஒன்றை எடுத்து அதில் கடைசி பக்கம் இருந்த வேண்டுதலை படிக்க வைத்தது. அதை படித்து கையொப்பமிட்டேன்.

அன்று இரவு முதல் இயேசுவை என் சொந்த மீட்பராக ஏற்று நான் அவரை குறித்து தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தேன்.

ஆனால் என் மனதில் அச்சம். அப்புத்தகத்தைக் கொடுத்தவரிடம் கேட்டால் இவர் என்னை கிறித்துவனாய் மாற்றி விடுவாரோ என்ற அச்சம்...

ஆனால் நான் கையொப்பமிட்டதை அவரிடம் தயங்கி சில வாரங்களுக்கு பின் கூறினேன். அவர் உடனே தேவனை போற்றி, இவ்வளவே, தேவன் உங்களை வழிநடத்தும் படியே வாழுங்கள் என்றார்.

விவிலியம் படித்து தினமும் வேண்டுதல் ஏறெடுத்து வந்தேன். பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்று அந்நிய மொழி பேசி கர்த்தரை மேன்மை படுத்த அருளினார். ஆயினும் திருமுழுக்கு ஞானஸ்நானம் பெறவில்லை.

பின்னர் ஞாயிறு காலை சென்னை, சின்னமலையில் உள்ள புதுவாழ்வு ஏ ஜி சபையில் நடக்கும் சில ஆராதனையில், பற்பல தடைகள் மீறி கலந்து கொள்ள என் தேவன் துணை நின்றார்.

ஒரு ஞாயிறு என்னை திருமுழுக்கு எடுக்க ஒப்புக்கொடுக்க ஆவியானவர் வழிநடத்திய படியே, நான் 1996ல் ஏ ஜி சபை, சின்னமலை, சென்னையில் திருமுழுக்கு எடுத்துக் கொண்டேன். திருமுழுக்கு எடுக்க ஒப்புக் கொடுத்த அன்று மாற்று துணி கூட இல்லை என்னிடம்.

ஆனால் அன்றே திருமுழுக்கு பெற ஆவியானவர் வழிநடத்திய படியே ஒப்பு கொடுத்து, திருமுழுக்கு தொட்டியருகே நின்ற போது என்னிடம் நற்செய்தி பகிர்ந்த சகோதரர் அங்கு வேறொரு நண்பரின் திருமுழுக்கைக் காண வந்திருந்தார். அவருக்கு வியப்பு... ஏன் இவன் இங்கு வரிசையில் நிற்கிறான் என்று.


அவர் பேசிய போது எனக்கு மாற்று துணியுமில்லாததை அறிந்து அவர் வீட்டிற்கு விரைந்து ஒரு மேல்சட்டையும் கால் சட்டையும் கொண்டு வந்தார். அதை உடுத்தி திருமுழுக்கு எடுத்து, பின் என்துணிகளை அணிந்து கொண்டு வீடு சென்றேன்.

ஏதேதோ சாக்கில் பல ஞாயிறுகளில் வீட்டை விட்டு வெளியேறி, ஆராதனைகள், ஆராதனை கூட்டங்கள் என்று நான் என் ஆவிக்குறிய வளர்ச்சியில் வளர, ஒருநாள் "உள்ளதை உள்ளதென்று கூறுங்கள். இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்" என்ற இயேசுவின் வார்த்தை மூலம் ஆவியானவர் என் பெற்றோர், என் உடன் பிறந்த தமக்கையர் இருவரிடமும் என் மனமாற்றம் குறித்து, படிப்படியாக கூற ஆவியானவர் வழிநடத்தினார்.

2005ல் கர்த்தர் ஒரு பெண்ணை மணந்து கொள்ள பணித்தார். அதன்படியே கீழ்படிந்தேன்.

என்னை பிடித்த அந்நோய் என்னை விட்டு போய் அதின் சுவடு கூட இல்லாமல் இருந்தது. ஆனால் 2012 ல் மறுபடியும் அதே இழுப்பு வர, மருத்துவர்கள் தலை CT scan செய்து பார்த்து எந்த ஒரு சுவடும் இல்லை என்றனர்.  

தேவன் முதலில் ஆபிரகாம் என்று நாமம் கூறி அழைத்தார். பின்னர் வேறு நாமங்களையும் அளித்தார். தேவ ஆவியானவர் வழிநடத்தியபடியே எங்கள் வாழ்வில் வளமும் மகிழ்ச்சியும் நிறைந்து வாழ்ந்தோம். தேவ ஆவியானவர் என்னை நிறுத்திய இடத்திலெல்லாம் ஒரு சாட்சியின் ஜீவியம் வாழ தேவன் அருள் புரிந்தார். தமிழகத்தில் இருந்து வெகு தொலைவில் பூனேயில் இருந்ததால் ஞாயிறு ஆராதனையில் பங்கேற்காமல் இருந்தோம். சபை கூடிவருதலை விட்டுவிடாதிருங்கள் என்ற வசனம் என்னை சிறிதும்
குற்றப்படுத்தவில்லை. என் பிதாவின் சித்தத்தை செய்வதே என் போஜனம் என்று சொன்ன இயேசுவின் வார்த்தைகளுக்கு ஒப்ப பிதாவின் சித்தம் என்ன என்பதை ஆவியானவர் வழி நடத்த மேற்கொண்டு வந்திருந்தேன். அலுவலக மக்கள் பலருக்கு என் விசுவாச வாழ்க்கை அறியாதிருந்த போதும், சிலர் அறியும் படி தேவன் சித்தமாயிருந்தார். தேவ ஆவியானவர் வழிநடத்திய படியே சிலருக்கு சுவிசேஷம் அறிவித்தேன். எவ்வளவு பேர் விசுவாசித்தனர் என்று நான் அறியேன். "விதைத்தவனும் அறுக்கிறவனும் வேறு" என்று இயேசு எடுத்தாண்ட பழமொழிச் சொல்லென்னை ஆறுதல் படுத்தியது.

தேவன் முன்குறித்த வேளைகளில் வேலை மாற்றங்கள், ஊர் மாற்றங்கள் நடந்தேறின. எல்லா வளங்களையும் கர்த்தர் அளித்திருந்தார். ஆயினும் எங்களுக்கு பிள்ளை இல்லாதிருந்தது. ஆபிரகாம் என்று அழைத்தீரே, ஏன் எங்களுக்கு பிள்ளை இல்லை என்று பல முறை தேவ சமூகத்தில் அழுது புலம்பியிருக்கிறேன். அப்போதெல்லாம், "என்னை விசுவாசி, உனக்கு பிள்ளையை கொடுக்க நான் வல்லவராயிருக்கிறேன்" என்று தேவன் ஆறுதல் படுத்துவார்.

அற்புதம் செய்யும் தேவன் அல்லவா நம் தேவன்! திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பின்னர் தேவன் எங்களுக்கு ஒரு பெண் குழந்தையை அருளினார். குழந்தை பிறந்ததும் வேறு வேலை கிடைக்கவும் பெங்களூருவில் வசிக்கவும் கர்த்தர் அருள் புரிந்தார். இரண்டு வருடம் தேவ சித்தத்தின்படியே பெங்களூருவில் இருந்தோம். மறுபடியும் தேவ சித்தம் எங்களை பூனேவிற்கு அழைத்துச் சென்றது. இம்முறை 8 மாதங்கள் பின்னர் என் உடல்நிலை மோசமானது. காதில் ஒரு தொற்று சுமார் 15 வருடங்களுக்கு முன் உண்டாயிருந்தது. தேவனிடம் மன்றாடிய போது, என் மகிமை இதில் விளங்கும் என்று கூறியிருந்தார். அவருடைய கிருபையான சித்தத்தின் படி, என்னை அற்புதமாக காத்துக் கொண்டிருந்தார். 

உடல் நிலை மிகவும் மோசமாகி காதில் இருந்து இரத்தம் வடிய ஆரம்பித்தது. அறுவை சிகிச்சை அவசியம் என்று மருத்துவர்கள் அறுதியாக கூறிவிட்டனர். நானும் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டேன். அறுவை சிகிச்சை 2 மணிநேரம் ஆகும் என்றனர். தேவ ஆவியானவரிடம் ஒப்புக் கொடுத்து அறுவை சிகிச்சைக்குள் சென்றேன்.

ஆனால் 4 மணிநேரம் அறுவை சிகிச்சை நடந்தேறியது. சிகிச்சை செய்த மருத்துவர், நீங்கள் உயிரோடு இருப்பதே ஒரு அற்புதம். இவ்வளவு வருடம் தொற்று உங்களுக்குள் இருந்து வந்திருக்கிறதே. பலர் தொற்று மூளைக்கு பரவி இறந்துவிடுவர் என்றார்.

தேவன் என்னை தன் முடிவில்லா இரக்கத்தினால் வேலியடைத்து காத்துக் கொண்டிருந்ததை உணர முடிந்தது. அறுவை சிகிச்சை முடிந்ததும் அலுவலகம் சென்றேன். நிலைமை மிகவும் மோசமாக இருந்தது.

அறுவை சிகிச்சை முடிந்து வந்தும் 15 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய சூழல். என்னால் முடியாத நிலையில் வேலையை விட வேண்டிய நெருக்கடி. 

"தேவனே, என் கொம்பை உயர்த்தியவர் நீரன்றோ! உம் குமாரனுக்கு இப்படியொரு நிலையா?" என்று கேட்ட போது இயேசுவிடமே அடையாளம் கேட்ட மக்கள் இவ்வுலகத்தார் என்று ஆவியானவர் கூறினார்.

வேலையை விட்டுவிட தேவன் பணித்தார். கீழ்படிந்தேன். பெங்களூருவுக்கு திரும்பினோம். வேலை தேடினேன். ஒன்றும் கிடைக்கவில்லை. முட்டி மோதி தேடினேன். கிடைக்கவில்லை. இடது காதின் கேள்திறன் 20% தான், அது முழுமையாக குணமடையாமலே இருந்தது.

தேவன் என் தமிழ்ப் பற்றை பயன்படுத்தினார். இணையத்தில் இலக்கணம் படித்து, வெண்பா வடிவில் நான்கு நற்செய்திகளை எழுதிடப் பணித்தார். செப்டம்பர் 2015ல் ஆரம்பித்து ஆகஸ்டு 2016ல் முடித்தேன். (http://yesuvenpa.blogspot.com)

புத்தக வடிவில் வெளிவர ஒரு சகோதரரின் காணிக்கையும் என் சொந்த பணமும் கொண்டு புத்தகம் அச்சிட்டேன். ஆனால் புத்தகத்தை விற்பனை செய்து பணமாக்க மனதில்லை. எங்கெங்கெல்லாம் சென்றேனோ அங்கெல்லாம் இலவசமாக கொடுத்து வந்தேன்.

செப்டம்பர் 2016ல் தேவன் என்னை மறுபடியும் முழு ஊழியத்திற்கு ஒப்புக் கொடுக்க கட்டளையிட்டார். நானோ, இப்போதும் உம் வேலையைத்தானே செய்துக் கொண்டிருக்கிறேன் என்றேன். ஆவியானவர் மிகத் தெளிவாகப் பேசினார். எவ்வளவு முறை நீ ஒப்புக் கொடுக்காமல் இருப்பாய் என்று கேட்டார்,

"ஒப்புக்கொடுக்கிறேன் ஆண்டவரே!" என்று கீழ்ப்படிந்தேன்.

நான் வேலையை விட்ட நாளில் இருந்து இந்நாள்வரையில் உணவு, உடை, இருப்பிடம் இம்மூன்றையும் தேவன்  குறைவில்லாமல் அளித்து வந்திருக்கிறார். என் மகளின் படிப்புத் தேவைக்காக ஆச்சரியமாய் அனுகூலம் செய்பவர் பணத் தேவைகளைச் சந்தித்திருந்தார். காணிக்கைகள் பெற்று அந்த பணத்தில் வாழ்க்கை நடத்த எனக்கு சிறிதும் உடன்பாடில்லை.

இதுவரையில் கர்த்தர் அளித்ததெல்லாம் என் கடந்த காலத்தின் சேமிப்புகள் அல்லது என கரங்களே வேலை செய்து சம்பாதித்தவை. இருப்பினும் சிலர் காணிக்கையை வலுக்கட்டாயமாக கொடுத்துவிடுவர். காணிக்கையாக வந்த எல்லா பணமும் புத்தக அச்சிடுவதற்கும் மற்ற சில கர்த்தருடைய ஊழியத்திற்கும் செலவழித்தேன். 2015 ல் மூளையில் ஏதோ கோளாறு காரணமாக கண்பார்வையில் குறை ஆரம்பித்தது. என்ன கோளாறு என மருத்துவர்கள் சரியாக சுட்டிக் காண்பிக்க இயலா நிலை. 

இப்படியிருக்க ஆண்டவர் ஒரு முகநூல், வாட்ஸப் குழுமத்தை தொடங்க வைத்தார். "ஒலிவ மலை - கிறிஸ்துவைப்போல் வாழ்க்கை" என்று ஊழியத்திற்கு பெயரிட்டார். செப்டம்பர் 26, 2016 முதல் இந்த ஊழியத்தை செய்து வந்தேன். 

2019ஆம் ஆண்டில் எனது ஊழியத்தின் அழைப்பு என்ன என்ற தெளிவை ஆண்டவர் அளித்தார். வேதத்தை போதித்தல் என்ற போதக ஊழியத்தை அளித்தார். அந்த ஊழிய அழைப்பிற்கு என்னை நானே தகுதி படுத்திக்கொள்ள வேண்டுமே என்று கேட்டதற்கு 2020 செப்டம்பர் மாதத்தில் இருந்து ஆண்டவர் இலங்கையில் உள்ள ஒரு வேதாகம கல்லூரியில் மின் வாயிலாக படிக்க அருள் புரிந்தார். இரண்டாண்டுகள் முடித்து தற்போது மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டு வருகிறேன். 

2020ல் கொரோனா பாதிப்பால் உலகமே வீட்டிற்குள் முடங்கியது. ஊழியங்கள் பாதிக்கப்பட்டன. கொரோனாவால் நானும் பாதிக்கப்பட்டேன். இந்த பாதிப்பின் பின்னரே மருத்துவர்கள் மூளைக்குக் கீழே ஒரு கட்டி இருப்பதைக் கண்டறிந்தனர். அந்த கட்டியே கண்பார்வை குறைக்கு காரணி. அறுவை சிகிச்சை செய்ய இயலாத இடத்தில் கட்டி இருப்பதாக கூறினர். SBRT எனும் ரெடியேஷன் தெரபி செய்ய முடியும் என்றனர். அதுவரை சேமித்து வைத்திருந்த எல்லா பணத்தையும் செலவழித்து சிகிச்சை பெற்றேன். பூரண சுகம் கிடைக்கவில்லை. இருப்பினும், அதையெல்லாம் பொருட்டாக எண்ணாமல்  ஊழியத்தை தொடர்ந்து நடத்திட ஆண்டவர் அருள் புரிந்து வருகிறார். ஒரு இலவச வேதாகம பள்ளி தொடங்கிட பணித்தார். அதன்படி ஒலிவ மலை கிறிஸ்தவ இறையியல் கற்றல் மையம் என்ற ஊழியத்தின் பெயர் சூட்டி வேதாகம வகுப்புகளை இலவசமாக நடத்தி  வருகிறேன். 

யேகோவா நாமமுள்ள தேவனுக்கே மகிமை. என்வாழ்வில் தேவன் செய்த வேறு பல அற்புதங்கள் உண்டு. அவற்றை எழுதினால் அதற்கே ஒரு புத்தகம் வெளியிட வேண்டும். அநாதி அன்பினால் என்னை அன்பு கூர்ந்து, அவரின் காருண்யத்தால் இழுத்துக் கொண்டவர் நம் தேவன். அவரின் திருநாமத்தை உயர்த்தவே என்னை அவர் படைத்தார் என்ற ஆழமான நம்பிக்கை என்னுள் மிக நன்றாய் விதையூன்றி, அந்தப்படியே கிறிஸ்துவிற்குள் ஒரு சாட்சி வாழ்க்கை வாழ என்னை அவர் காத்து நடத்தி வருகிறார். நான் எந்த இடத்தில் இருந்தாலும், கர்த்தர் நாமம் மகிமைபட என்னை அவர் பயன்படுத்தி வருகிறார்.

யேகோவா என்னும் நாமமுள்ள பிதாவாகிய தேவன் ஒருவருக்கே மகிமையை ஏறெடுத்து, நம் மீட்பர் இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்தி, ஆவியானவரின் ஐக்கியம் உங்களோடே என்றும் இருக்க வேண்டி இந்த சாட்சியை நான் முடித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment